வேளாங்கண்ணிக்குச் சென்ற வீட்டுக்காரர்: பூட்டை உடைத்து வேலையைக் காட்டிய திருடர்கள்


திருட்டு நடந்த வீடு

கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்குச் சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (51). இவர் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். ராமச்சந்திரன் அவரது மகன்கள் மணிகண்டன், புகழேந்தி ஆகியோர் ஒரே வீட்டில் வசித்துவருகின்றனர். இந்நிலையில், குடும்பத்தினர் அனைவரும் வீட்டைப் பூட்டிவிட்டு நேற்று வேளாங்கண்ணி தேவாலயத்துக்குச் சென்றனர்.

இந்நிலையில் ராமச்சந்திரன் வீட்டுக்கு வந்த செப்டிக் டேங்க் லாரி ஓட்டுநர் ஒருவர், வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து, அவருக்குத் தகவல் கொடுத்தார்.

அதனையடுத்து வேளாங்கண்ணியில் இருந்து ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் விரைந்துவந்து திறந்து கிடந்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீடு மற்றும் மாடியில் உள்ள மகன்கள் வீடுகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து 23 பவுன் தங்க செயின், மோதிரம், வளையல், ஆரம் உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் இரண்டு கிலோ மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் திருட்டுப்போனது தெரியவந்தது.

இது குறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x