காரின் மீது விழுந்த மெட்ரோ ரயில் கட்டுமான பொருள் : நூலிழையில் குழந்தையுடன் உயிர் தப்பிய தம்பதி


சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் காரில் குடும்பத்தினருடன் மயிலாப்பூர் சென்று விட்டு, பின்னர் மீண்டும் சோழிங்கநல்லூரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி சென்றுக் கொண்டு இருந்தார். காரில் அவரது மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தை ஆகியோர் இருந்தனர். ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் வழியே இவர்களது கார் சென்றுக் கொண்டிருந்த போது மர்மப் பொருள் ஒன்று திடீரென காரின் மேற்பகுதி மீது விழுந்துள்ளது.

இதில் காரின் முன் பகுதியில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறியது. நல்வாய்ப்பாக காரில் இருந்த பத்மநாபன் அவரது மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தை காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர். உடனடியாக காரை நிறுத்திவிட்டு அப்பகுதியில் இருந்த மெட்ரோ ரயில் பணியாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் எந்த பொருள் விழுந்தது என தெரியவில்லை என கூறியதாக தெரிகிறது.

இதனால் அவர்களுடன் பத்மநாபன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எதையும் கடைபிடிக்காமல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கண்ணகி நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

x