பிஹார் மாநிலம் கிஷன்கஞ்சில் உள்ள ஊரகப் பணித் துறையின் செயல் பொறியாளர் சஞ்சய் குமார் ராய் வீட்டில் விஜிலென்ஸ் துறையினர் இன்று நடத்திய சோதனையில் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், பாட்னாவின் இந்திரபுரி சாலை எண் 10ல் உள்ள செயல் பொறியாளர் சஞ்சய் குமார் ராய் வீட்டில் விஜிலென்ஸ் அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக ரொக்கம் சிக்கியது.
மேலும், சஞ்சய் குமார் ராயின் ஜூனியர் பொறியாளர் மற்றும் காசாளர்களின் வீடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அரசு அதிகாரிகளின் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணுவதற்காக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களே திணறும் அளவுக்கு கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சோதனையில் மேலும் பல ஆவணங்களும் சிக்கியுள்ளன. இன்றைய சோதனையில் 3 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கமும், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரகப் பணித் துறையின் செயல் பொறியாளர் வீட்டிலேயே இவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளதால், மேலும் இது தொடர்பாக விசாரணையை விரிவுப்படுத்த விஜிலென்ஸ் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.