திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.1.89 கோடி மதிப்பிலான தங்கம், ரொக்கம் பறிமுதல் - போலீஸார் விசாரணை


திருச்சி ரயில் நிலையத்தில் இன்று ரயில்வே போலீஸார் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து திருச்சி வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகளை ரயில்வே போலீஸார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது லட்சுமணன் என்பவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது, அதில் தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவை இருந்துள்ளது.

இந்த பணம் மற்றும் நகைகள் குறித்து லட்சுமணனிடம் கேட்ட போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவரை ரயில் நிலைய காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று மேற்கொண்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் சுமார் 1.89 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும், 15 லட்சம் ரூபாய்க்கு ரொக்கமாக பணமும் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து லட்சுமணனை கைது செய்துள்ள போலீஸார், இந்த நகைகள் மற்றும் பணம், கருப்புப்பணமா அல்லது எங்காவது கொள்ளையடிக்கப்பட்டவையா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x