மும்பையில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ சினிமா பாணியில் போலி வருமான வரித்துறை சோதனை நடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மும்பையை சேர்ந்த தொழிலதிபர் மயங்க் பஜாஜின் வீட்டில் ஜூலை 26 அன்று பிற்பகல் 1 மணியளவில், அவர் இல்லாத நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி ஒரு கும்பல் வீட்டிற்குள் புகுந்தனர். இவர்கள் சாதாரண உடையில் வந்து போலி அடையாள அட்டைகளைக் காட்டி வருமான வரித்துறை அதிகாரிகள் போல் காட்டிக் கொண்டனர். போலி வாரண்ட்டை காட்டி ரெய்டு நடத்தவும் ஆரம்பித்தனர். வீட்டில் இருந்து 1 லட்சம் ரூபாய் பணத்தையும் கைப்பற்றினர்.
ஆனால், திடீரென மயங்க் பஜாஜ் வீட்டிற்கு திரும்பி வந்தார். உடனே அவர் ஐடி துறையைத் தொடர்பு கொண்டு பேசினார். ஐடி துறையால் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய அவர், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து போலீசார் வந்து அந்த கும்பலை அலேக்காக கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை தீரஜ் காம்ப்ளே, பிரசாந்த் பட்நாகர், வாசிம் குரேஷி மற்றும் எஜாஸ் கான் என்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான நிதா காம்ப்ளே தொழிலதிபரின் வீட்டில் வீட்டு உதவியாளராக இருந்தார். அந்த கும்பலுக்கு பணம் பற்றிய தகவலை நிதா கொடுத்த பிறகுதான் அவர்கள் இந்த போலி சோதனையை திட்டமிட்டனர். இந்த கும்பலின் மூளையாக செயல்பட்ட நிதின் கோத்தாரி, நிதா காம்ப்ளே, மரியம் அப்பா, ஷமிம் கான் ஆகியோர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், அவர்கள் வேறு எங்கும் கைவரிசை காட்டியுள்ளார்களா என தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மும்பையில் உள்ள பார்க்சைட் காவல் நிலைய போலீஸார், துரிதமாக செயல்பட்டு லாவகமாக போலி வருமான வரித்துறை கும்பலை மடக்கிப்பிடித்த இந்த சம்பவம் இப்போது வெளிவந்துள்ளது.