வண்டலூர் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 29 சவரன் நகை திருட்டு


மாதிரிப் படம்

வண்டலூர்: வண்டலூர் அருகே, கோயிலுக்குச் சென்றவரின் வீட்டு ஜன்னல் கம்பியை உடைத்து 29 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வண்டலூர் சிங்காரத் தோட்டம் 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (54). இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மேன்பவர் கன்சல்டன்சி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை 8 மணிக்கு ராமலிங்கம் வேலைக்குச் சென்று விட்டார். அவரது மகள் கமல பிரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்து வருகிறார்.

இவரும் நேற்று காலை 8 மணிக்கு வேலைக்குச் சென்று விட்டார். ராமலிங்கத்தின் மனைவி தமிழரசியும் அவரது மகன் லோகேஷும் காலை 10 மணியளவில் வீட்டைப் பூட்டிவிட்டு திண்டிவனம் அருகே உள்ள மயிலம் முருகன் கோயிலுக்குச் சென்று விட்டனர்.

கோயிலுக்குச் சென்றவர்கள் மீண்டும் 8 எட்டு மணி அளவில் வீட்டுக்குத் திரும்பியவர்கள், வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 29 சவரன் தங்க நகைகளையும், இரண்டு கிலோ வெள்ளிப் பொருட்களையும் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

உடனடியாக இது தொடர்பாக வண்டலூர் ஓட்டேரி போலீஸில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீஸார், வீட்டின் பின்பகுதியில் ஸ்க்ரூட்ரைவர் மற்றும் சென்ட்ரிங் வேலைக்குப் பயன்படுத்தும் கம்பி உள்ளிட்ட பொருட்கள் கிடந்ததை கண்டெடுத்தனர்.

இந்தத் திருட்டு சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் அருகே எந்த சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படாததால் திருடர்களைப் பிடிப்பதில் போலீஸாருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

x