விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர்: வழிபறியில் ஈடுபட்டு கைது!


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருவாவடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கண்ணனின் மனைவி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் கத்தியை காட்டி கண்ணனின் மனைவியை மிரட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக குத்தாலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் ஆய்வு மேற்கொண்டதில் ஹெல்மெட் அணிந்த இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்திய போலீஸார், அவர்கள் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த வசந்த் மற்றும் சிவா ஆகியோர் என்பதை கண்டறிந்தனர். இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திய போது, வசந்த் தற்போது இந்திய ராணுவத்தில் 80-வது பெட்டாலியனில் மிசோரமில் பணியாற்றி வருவது தெரிய வந்தது.

விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தபோது, நண்பருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் வசந்த் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து செலவு செய்தது போக மீதமிருந்த 4 சவரன் தங்கச் சங்கிலி, 2 செல்போன்கள், வழிப்பறிக்கு பயன்படுத்திய வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சூதாட்டம் மற்றும் மது விருந்து ஆகிய ஆடம்பர செலவுகளுக்காக விடுமுறையில் வந்த போது ராணுவ வீரர் வசந்த் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் கும்பகோணம் மற்றும் நாச்சியார்கோவில் ஆகிய பகுதிகளில் 4 இடங்களில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட வசந்த் மற்றும் சிவா ஆகியோர், கொள்ளையடித்த பணத்தை கொண்டு விடிய விடிய சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் பணத்தை இழந்து விட்டதால் மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

x