பேருந்தின் மேற்கூரை மீது ஏறி ரகளை; கல்லூரி மாணவர்களின் வீடியோ வைரல்: போலீஸார் தீவிர விசாரணை


கோப்புப் படம்

சென்னை: பேருந்தின் மேற்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை பூந்தமல்லி – பிராட்வே செல்லும், தடம் எண்- 53 மாநகர பேருந்தின் மேற்கூரையின் மீது, கல்லுாரி மாணவர்கள் சிலர் கூட்டமாக அமர்ந்து ரகளை செய்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், அதில், மாணவர்கள் சாலையை மறித்து, பேருந்தின் முன்புறத்தில் கூட்டமாக நடந்து வருகின்றனர்.

அதோடு பேருந்துகள் அந்த வழியாக செல்ல முடியாதவாறு மறித்துக் கொண்டு சாலையில் பயங்கர சத்ததுடன் பட்டாசுகளை வெடிப்பதுபோல் காட்சிகள் வெளியானது. மாணவர்களின் இந்தச் செயலால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோவை கைப்பற்றி அதில் உள்ள மாணவர்கள் யார் என போலீஸார் துப்புத் துலக்கி வருகின்றனர். போலீஸாரின் விசாரணையில் கடந்த 5-ம் தேதி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்தகரை – கீழ்ப்பாக்கம் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.

மேலும், இச்செயலில் ஈடுபட்டது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

x