ஆண் குழந்தை ஆசை: ஆடையின்றி மனைவியை பொதுவெளியில் குளிக்க கட்டாயப்படுத்திய கணவன்!


கணவன் மனைவி தகராறு

மகாராஷ்டிராவில் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக மந்திரவாதியின் ஆலோசனையின் பேரில், ஒரு பெண்ணை பொதுமக்கள் முன்னிலையில் ஆடையின்றி நிர்வாணமாக குளிக்க அவரது கணவர் மற்றும் மாமியார் கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த அந்த பெண்ணை 2013 ம் ஆண்டு முதல் வரதட்சணை கேட்டும், ஆண் குழந்தை பிறக்காததற்காகவும் கணவன் மற்றும் மாமியார் மனதளவிலும், உடலளவிலும் துன்புறுத்தியுள்ளனர். மேலும் ஆண் குழந்தைக்காக பல முறை பல பில்லி சூனிய சடங்குகளையும் செய்துள்ளனர்.

இந்த நிலையில்தான் சமீபத்தில் உள்ளூர் மந்திரவாதி ஒருவர், அந்த பெண் நீர்வீழ்ச்சியின் கீழ் பொது மக்கள் முன்னிலையில் நிர்வாணமாக குளிக்கவேண்டும் என்றும், இது தொடர்பான சடங்குகளைப் பின்பற்றினால் நிச்சயமாக ஆண் குழந்தை பிறக்கும் என்றும் உறுதியளித்தார். இதற்காக ராய்காட் மாவட்டத்திற்கு சென்று பொதுமக்கள் முன்னிலையில் அந்த பெண்ணை நிர்வாணமாக குளிக்கச் சொன்னார். ஆனால் இதனை அந்தப் பெண் ஏற்கவில்லை. இருப்பினும் மந்திரவாதியின் சடங்கினை பின்பற்ற வேண்டும் என கணவன் மற்றும் மாமியார் அவரை கட்டாயப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் காவல்துறையை நாடினார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து புனே காவல்துறை, பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் மந்திரவாதி மௌலானா பாபா ஜமாதார் உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

x