மும்பை நகரை தகர்ப்போம்: பாகிஸ்தானிலிருந்து வந்த வாட்ஸ்அப் மிரட்டல் மெசேஜ்!


மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைப் போல மீண்டும் தாக்குதல் நடத்தி மும்பை நகரை தகர்ப்போம் என மும்பை போக்குவரத்துப் பிரிவு உதவி எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் பாகிஸ்தானிலிருந்து அச்சுறுத்தல் வந்துள்ளது. இதையடுத்து மும்பையில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மும்பை போக்குவரத்துக் காவல் பிரிவின் உதவி மையத்தின் கட்டுப்பாட்டு அறை வோர்லியில் உள்ளது. அங்குள்ள செல்போன் எண்ணுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் ஒரு தகவல் வந்துள்ளது. அதில், மும்பையில் 6 பேர் கொண்ட குழுவை வைத்துத் தாக்குதல் நடத்தப்படும். மும்பையைத் தகர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து அச்சுறுத்தல் செய்தி வந்த செல்போன் எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தினர். பாகிஸ்தானில் உள்ள செல்போனிலிருந்து அந்த செய்தி வந்திருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக மும்பை காவல்துறை ஆணையர் விவேக் பன்சால்கர் தெரிவிக்கையில், “பாகிஸ்தானிலிருந்து இந்த மிரட்டல் தகவல் அனுப்பப்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை காவல்துறை தீவிரமாகக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. கடலோரங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடலோரக் காவல் படையுடன் இணைந்து மும்பை காவல்துறை களமிறங்கியுள்ளது" என்றார்.

x