வறுமை காரணமாக குஜராத்தை சேர்ந்த ஒரு நபர் தனது 11 மாத மகனை, ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள கால்வாயில் தூக்கி வீசிக் கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த முகேஷ் பெர்வாலுக்கு முறையான வேலை இல்லாததால் வறுமையில் சிக்கித் தவித்தார். கையில் பணம் இல்லாததால் தனது மகனுக்கு உணவளிக்க கூட முடியாததால் அவர் இந்த கொடூர முடிவினை எடுத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் ஜலோரில் உள்ள நர்மதா கால்வாயில் தனது மகனை தூக்கி எறிய முகேஷ் முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து முகேஷ் வியாழக்கிழமை தனது மனைவி உஷா மற்றும் மகன் ராஜ்வீருடன் ஜலோரின் சஞ்சூர் பகுதிக்கு சென்றார். தனது தந்தை சஞ்சூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார் என்றும், ராஜ்வீரை அவருடன் விட்டுவிடலாம் என்றும் தனது மனைவியிடம் முகேஷ் பொய் சொன்னார்
பின்னர், முகேஷ் தனது மனைவியிடம் ராஜ்வீரை தனது தந்தையின் வீட்டிற்குச் சென்று விட்டு வரும் வரை கால்வாய் அருகே காத்திருக்கச் சொன்னார். கலப்பு திருமணம் என்பதால், தனது தந்தை உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று மனைவிடம் பொய் கூறினார் முகேஷ்.
இதனைத் தொடர்ந்து முகேஷ் பெர்வால் தனது மனைவி காத்திருந்த இடத்திலிருந்து 150-200 மீட்டர் தொலைவில் உள்ள கால்வாயில் தனது மகனை வீசினார். அவர் உஷாவிடம் திரும்பி வந்து, ராஜ்வீர் இப்போது தனது தந்தையுடன் பத்திரமாக இருப்பதாகக் கூறினார். இருப்பினும், பெர்வால் குழந்தையை கால்வாயில் வீசுவதைப் பார்த்த உள்ளூர் நபர் ஒருவர், அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில், பெர்வால் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தீவிர தேடுதலுக்கு பின்னர் அந்த குழந்தையின் சடலம் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டு அவரின் தாயாரிடன் ஒப்படைக்கப்பட்டது.