சென்னை ஐஐடி கல்லூரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சென்னை அடுத்த ஆவடி அருகே சென்னை ஐஐடி மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஆவடி ரயில்வே தண்டவாளப் பகுதியில் தலை மற்றும் முகத்தில் காயத்தோடு பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரயில்வே பணியாளர்கள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தனர் சடலத்தை மீட்டு ரயில்வே துறையினர் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மாணவி ஒடிசாவைச் சேர்ந்த மேகாஸ்ரீ என்பது தெரியவந்துள்ளது. டெல்லியில் எம்.டெக் மற்றும் பிஎச்.டி பட்டம் பெற்ற மேகாஸ்ரீ சென்னை அடையாறில் உள்ள ஐஐடியில் மூன்று மாத ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வந்தது தெரியவந்தது. ஐஐடி மாணவி மரணம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.