நிலத்தை அளவீடு செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம் : விஏஓ கைது!


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், நிலத்தை அளவீடு செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டி.கடம்பன்குளம் விஏஓ கைது செய்யப்பட்டார்.

காரியாபட்டி அருகே உள்ள கீழப்பிலிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நக்கீரன். மதுரையில் உள்ள தனது உறவினருக்கு சொந்தமான நிலத்தை பராமரித்து வருகிறார். அந்த நிலத்தை சர்வேயர் மூலம் அளவீடு செய்து நான்கு புறங்களிலும் எல்லை கல் ஊன்றுவதற்கு டி.கடம்பன்குளம் விஏஓ செல்வராஜை(45) அணுகியுள்ளார். அதற்காக விஏஓ செல்வராஜ் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என நக்கீரன் கூறியதால், ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் சர்வேயர் மூலம் பணியை முடித்துக் கொடுப்பதாக விஏஓ செல்வராஜ் கூறியுள்ளார்.

அதன்படி, விஏஓ செல்வராஜ் காரியபட்டியில் ஒரு வணிக வளாகத்தில் தனியாக அலுவலகம் நடத்தி வரும் தனது அலுவலகத்திற்கு இன்று காலை பணத்துடன் நக்கீரனை வருமாறு கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத நக்கீரன் இது குறித்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாரளித்தார்.

அதையடுத்து இன்று காலை காரியாபட்டியில் உள்ள விஏஓ செல்வராஜ் அலுவலகத்தை போலீஸார் கண்காணித்து வந்தனர். அப்போது, விஏஓ செல்வராஜ் தனது அலுவலகத்திற்கு அருகே தையல் கடை நடத்தி வரும் மோகன்தாஸ் (55) என்பவரிடம் லஞ்சப்பணம் ரூ.25 ஆயிரத்தை கொடுக்குமாறு நக்கீரனிடம் கூறியுள்ளார். அதுபோல் தையல் கடைக்காரரிடம் நக்கீரன் பணத்தை கொடுத்த போது, அங்கே இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார், தையல் கடைக்காரர் மோகன்தாசையும் விஏஓ செல்வராஜையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பி-யான ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x