பிஹாரில் எட்டு மாதங்களாக செயல்பட்ட போலி காவல் நிலையம்: லட்சக்கணக்கில் பணம் வசூல்!


பிஹார் மாநிலத்தில் பாங்கா எனும் இடத்தில் எட்டு மாதங்களாக ஒரு கும்பல் போலி காவல் நிலையத்தை இயக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் மக்களை ஏமாற்றி அதிகளவு பணமும் பறித்துள்ளனர்.

போலீஸ் போல நடித்து மோசடி செய்யும் சம்பவங்களை ஆங்காங்கே கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் போலியாக போலீஸ் ஸ்டேஷனையே அமைத்து ஒரு கும்பல் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

உண்மையான பாங்கா காவல் நிலைய தலைமை அதிகாரியின் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவிலேயே அந்த கும்பல் அனுராக் ஹெஸ்ட் ஹவுஸில் போலி போலீஸ் நிலையத்தை உருவாக்கியுள்ளனர். போலீஸ் சீருடைகள், பேட்ஜ்கள், துப்பாக்கிகள், வாகனம் என மக்களுக்கு சந்தேகம் வராதபடி இந்த காவல் நிலையம் இயங்கியுள்ளது. அங்கு அதிகாரிகள் போல் வேடமிட்டவர்கள் பல்வேறு வழக்குகளுக்காக நூற்றுக்கணக்கானவர்களிடம் இருந்து பணமும் பறித்துள்ளனர்.

போலி போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் உள்ளூர் மக்களிடம் புகார்கள் மற்றும் வழக்குகளை பதிவு செய்யவும் பணம் வசூலித்துள்ளனர். அதே நேரத்தில் வீடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் உறுதியளித்து மற்றவர்களிடமிருந்து பணம் பெற்றுள்ளனர். இந்த ஸ்டேஷனில் போலீஸ் வேடமணிந்து பணிபுரிந்தவர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ. 500 வழங்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி கும்பலைச் சேர்ந்த இருவர் உள்ளூர் பட்டறைகளில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருந்ததை உள்ளூர் காவல்துறை அதிகாரி ஷம்பு யாதவ் கவனித்து விசாரணை நடத்தியபோது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த கும்பலை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர், ஆனால் கும்பலின் தலைவன் போலா யாதவ் இன்னும் தலைமறைவாக உள்ளான் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x