போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்தவர் மர்ம மரணம்!


கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஜா.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் அவரை நல்வழிப்படுத்துவதற்காக குச்சிபாளையம் ஐயப்பன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் லோட்டஸ் ஃபவுண்டேஷன் என்ற போதை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த 5ம் தேதி அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மையத்திலிருந்து ராஜசேகரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக அந்த நிர்வாகிகள் மீண்டும் செல்போனில் அழைத்துக் கூறியதால் அவரது உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, ராஜசேகரின் உடலில் காயங்கள் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் கணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக ராஜசேகரின் மனைவி ராஜாமணி என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ராஜசேகரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள், லோட்டஸ் ஃபவுண்டேஷன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறைக்கு பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து நேற்று முழுவதும் போலீசார் லோட்டஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அடிப்படையில் இன்று போலீஸாரின் முன்னிலையில் வருவாய் துறையினர் லோட்டஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். மேலும் இந்நிறுவனத்தின் உரிமையாளரான பாஜகவின் முன்னாள் மாவட்ட செயலாளரான காமராஜ் என்பவர் உட்பட 6 பேரைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x