கேரளாவில் தொடரும் அரசியல் மரணங்கள்: பாலக்காட்டில் சிபிஎம் நிர்வாகி வெட்டிக் கொலை


கேரள மாநிலம் பாலக்காடு மருதரோட்டில் நேற்றிரவு 9.15 மணியளவில் சிபிஎம் உள்ளூர் கமிட்டி உறுப்பினர் ஷாஜஹான் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார்.

தனது வீட்டின் அருகே நேற்று சுதந்திர தின விழா ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தபோது, ஷாஜஹானை இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று வெட்டியது. சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இது தொடர்பாக போலீஸாரின் ஆரம்பகட்ட அறிக்கையின்படி, “எட்டு பேர் கொண்ட குழு நேற்று இரவு ஷாஜஹானை அவரது வீட்டின் அருகே வந்து தாக்கியது. இந்த வழக்கில் அரசியல் போட்டிக்கான வாய்ப்பு உள்ளது. ஷாஜஹான் ஒரு அரசியல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், இதுவும் அரசியல் போட்டியின் ஒரு பகுதியாக இருக்கும் என நாங்கள் சந்தேகிக்கிறோம்" என்று தெரிவித்தனர்.

கொலையை நேரில் கண்டவர்களையும், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி கூடுதல் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஷாஜஹானின் மறைவுக்கு கேரளா சிபிஎம் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த கொலைக்கு பின்னால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொடர்பு இருக்கலாம் எனவும் சிபிஎம் கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக உடனடியாக மறுத்துள்ளது.

முன்னதாக ஏப்ரல் 19 ம் தேதி பாலக்காடு மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவரான சுபைர் அவரது தந்தையின் கண் முன்னால் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ரமேஷ், ஆறுமுகம், சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பாலக்காட்டில் பிஎப்ஐ தலைவர் கொல்லப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் சீனிவாசன் வெட்டிக் கொல்லப்பட்டார். பி.எஃப்.ஐ.யின் அரசியல் கிளையான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா இந்த கொலைக்குப் பின்னால் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.

x