கட்டிப் போடப்பட்ட காவலாளி, மயக்க மருந்து கொடுக்கப்பட்ட மேலாளர்; 20 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை - சென்னையில் அதிர்ச்சி


சென்னையில் தங்க நகைக் கடன் வழங்கும் நிறுவனத்தில் காவலாளியை கட்டிப் போட்டுவிட்டு, மேலாளருக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு, வங்கியில் இருந்த 20 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அந்த வங்கியின் ஊழியர் கொள்ளை அடித்துச் சென்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் வழங்கும் பெட் பேங்க் கோல்ட் லோன் நிறுவனத்தின் கிளை உள்ளது. இதில் மேலாளராக சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மார்க்கெட்டிங் மேனேஜராக முருகன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று மாலை வழக்கம்போல் பணிகள் முடிவடையும் நேரத்தில் மார்க்கெட்டிங் மேனேஜர் முருகன் தனது இரண்டு நண்பர்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளார். அவர்கள் கையில் துப்பாக்கிகள் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

வாசலில் இருந்த காவலாளியை கை கால்களை கட்டி போட்டுவிட்டு அதிரடியாக உள்ளே நுழைந்த முருகன் உள்ளிட்டவர்கள் மேனேஜர் சுரேஷுக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு, துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி வங்கியில் இருந்த 20 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்து அவற்றை மூன்று பைகளில் நிரப்பி கொண்டு தப்பிச் சென்றனர். உடனடியாக இதுகுறித்து மேலாளர் சுரேஷ் காவல்துறைக்கு தகவல் அளித்தார். அதனை எடுத்து அவர்கள் இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளதால் அரும்பாக்கத்தில் இருந்து செல்லும் அனைத்து சாலைகளையும் போலீசார் தீவிர சோதனையிட்டு வருகின்றனர். தப்பிச் சென்றவர்கள் துப்பாக்கிகள் வைத்திருப்பதால் மிகவும் கவனத்துடன் சோதனை மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




x