ஹரியானா மாநிலத்தில் தாய் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை மகனே பலமுறை கத்தியால் குத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை மறைத்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.
கணவர் இறந்த பிறகு சோனா தேவி (40) தனது தாய்வழி கிராமமான ஹிசாரில் உள்ள கர்ஹியில் வசித்து வந்தார். ஒரு தனியார் பள்ளியில் வார்டனாக பணிபுரிந்த அவர், ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு அதே கிராமத்தில் வாடகை அறையில் வசித்து வந்தார்.
சோனா தேவியின் மகன் பிரவேஷ் சோனேபட்டில் உள்ள ஜட்வாடா மொஹல்லாவில் வசித்து வந்தார், மேலும் அவர் தனது தாயாரை அவ்வப்போது வந்து சந்திப்பார். ஆகஸ்ட் 6 ம் தேதி தாயைப் பார்க்க வந்தபோது, பிரவேஷ் சோனாதேவியை பலமுறை கத்தியால் குத்தியதாகவும், பின்னர் அவள் இறந்துவிட்டாள் என்பதை உறுதிப்படுத்த கழுத்தை நெரித்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவரது உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் துர்நாற்றம் வீசுவதாக அறையின் உரிமையாளர் புகார் அளித்ததையடுத்து, நான்கு நாட்களுக்குப் பிறகு சோனா தேவியின் சிதைந்த உடல் புதன்கிழமையன்று மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், பிரவேஷ் தனது தாயார் தொலைபேசியில் யாருடனோ பலமுறை பேசுவதைப் பார்த்ததால், அவர் யாருடனோ உறவில் இருப்பதாக சந்தேகித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதன்பின்னர் குற்றம் சாட்டப்பட்ட பிரவேஷ் நேற்று கைது செய்யப்பட்டார், அவர் தனது குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.