பள்ளி சென்ற 3 சிறுமிகள் மாயம்; பரிதவித்து தேடிய பெற்றோர்: வெளிச்சத்துக்கு வந்த கொடூரம்!


டெல்லியின் ரோகிணி பகுதியில் மூன்று பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு, மயக்க மருந்து கலந்த பானங்களை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 6 -ம் தேதி, மஸ்ஜித் மோத்தில் வசிக்கும் ஒருவர், ஆண்ட்ரூஸ் கஞ்சில் உள்ள பள்ளிக்கு காலை 7.30 மணியளவில் தனது மகள் சென்றதாகவும், ஆனால் மாலையில் அவர் திரும்பி வரவில்லை என்றும் கூறி டிஃபென்ஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணையின்போது அந்த மாணவி காலையில் தனது வாகனத்தில் ஏறவில்லை என்று பள்ளியின் வேன் டிரைவர் தெரிவித்தார். மேலும் அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை எனவும் பள்ளியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கூடுதல் விசாரணையின்போது, புகார்தாரரின் மகள் மட்டுமல்லாமல், பள்ளியைச் சேர்ந்த மேலும் இரண்டு சிறுமிகளும் காணாமல் போயுள்ளதாக காவல்துறை கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து காணாமல் போன அனைத்து சிறுமிகளின் பெற்றோர் மற்றும் வகுப்பு தோழிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சம்மந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த நிலையில் கரோல் பாக் பகுதியில் அந்த சிறுமிகளின் நடமாட்டம் பற்றிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டனர். இந்த சோதனையின்போது அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதன்பின்னர் வாக்குமூலம் அளித்த சிறுமிகள், குற்றவாளிகளில் ஒருவர் தங்களை ரோகினி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கடத்திச் சென்றதாகவும், அங்கு பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டு மயக்கமருந்து கலந்த பானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். எனினும், எப்படியோ அங்கிருந்து தப்பி வந்ததாகவும் அவர்கள் கூறினார்கள்.

இது தொடர்பாக பேசிய காவல்துறை துணை ஆணையர் பெனிடா மேரி ஜெய்கர், “ இந்த புகார் தொடர்பாக ரோகினியில் உள்ள வீட்டிற்கு போலீஸ் குழு அனுப்பப்பட்டது. அங்கிருந்து பெங்காலி லால் சர்மா (45), சந்தீப் (36), ருக்ஸானா (40) மற்றும் ஜோதி (19) ஆகியோரை கைது செய்யப்பட்டனர். ஆனால் மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் பிரகாஷ் என்பவன் தப்பியோடிவிட்டான். கைது செய்யப்பட்டவர்களின் ஷர்மா, ருக்ஸானா ஆகியோர் மனிதக் கடத்தல் கும்பலை நடத்தி வந்தனர். அவர்கள் சண்டிகரில் இந்த 3 சிறுமிகளையும் விற்க விரும்பினார்கள்” என தெரிவித்தார்.

டெல்லி மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் ஆகஸ்ட் 14 -ம் தேதிக்குள் விரிவான நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்யும்படி காவல்துறையிடம் கோரியுள்ளது.

x