பறக்கும் விமானம்; ஸ்டைலாக படுத்தபடி சிகரெட் - பிரபலத்தை பற்றவைத்த நெட்டிசன்கள்!


இன்ஸ்டாகிராம் பிரபலமான பாபி கட்டாரியா, ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்குள் இருக்கைகளில் படுத்தபடியே சிகரெட்டை பற்றவைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் பிரபலமான பஞ்சாப் மாநிலம் குர்கானில் வசிக்கும் பாபி கட்டாரியாவை 6.30 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள். தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோவில், விமான இருக்கையில் படுத்துக் கொண்டு கட்டாரியா சிகரெட்டை லைட்டர் மூலமாக பற்றவைக்கிறார். வீடியோ முடிவதற்குள் எந்த பதற்றமும் இல்லாமல் அவர் இரண்டு பஃப்ஸ் இழுக்கிறார். சமூக ஊடகங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவையும் டேக் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், “ பல்விந்தர் கட்டாரியா ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் துபாயில் இருந்து 23.01.22 அன்று டெல்லியில் வந்து தரையிறங்கினார். இந்த வீடியோ இப்போது அவரது பேஸ்புக்/இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இல்லை" என்று சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பீரோ தெரிவித்துள்ளது.

ஆனால் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கட்டாரியா தனது செயலை ஆதரிப்பது போல் செயல்பட்டு வருகிறார். இந்த சர்ச்சை குறித்த செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து, தனது செலவில் டிஆர்பியை அதிகரிக்க ஊடகங்கள் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். "டிஆர்பி மட்டுமே தேவை. எதையும் பேசுங்கள், அரசியல்வாதிகளையும் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்" என்று தனது இன்ஸ்டாகிராமில் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதனை தாண்டி, விமானத்தில் புகைபிடிப்பதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இந்தியாவில் பயணிகள் விமானத்திற்குள் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

x