தன் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரியவரிடம் 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம், கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் ஹக்கீம் (40). இவர் மீது இட பிரச்சினை தொடர்பாக மதுரை மாவட்ட காவல் துறையில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், இதே பிரச்சினை தொடர்பாக சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையிலும் இன்னொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால், ஒரு பிரச்சினை சம்பந்தமாக ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்ய முடியுமென்றும், அதற்கு மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருந்தால், இரண்டாவது இடத்தில் பதிவான வழக்கை ரத்துசெய்ய சட்டத்தில் இடமிருப்பதாகவும் கூறப்படுவதால் சிவகங்கையில் பதிவு செய்யப்பட்ட தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஹக்கீம், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணனிடம் முறையிட்டுள்ளார். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமானால் தனக்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று ராமகிருஷ்ணன் கேட்டிருக்கிறார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹக்கீம், இது குறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் புகார் செய்தார். அவர்கள் அறிவுரையின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சிவகங்கை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இருந்த காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணனிடம், ஹக்கீம் இன்று கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையிலான போலீஸார் ஆய்வாளர் ராமகிருஷ்ணனை கையும் களவுமாகக் கைது செய்தனர். இந்த அதிரடி நடவடிக்கை காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.