போலீஸார் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்: பொறிவைத்து பிடித்த கோவை போலீஸ்


கோவை ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ். தொழிலதிபரான இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை பந்த்ரா நகர் காவல் நிலையத்திலிருந்து தொடர்பு கொள்வதாக கூறி சிலர் போன் மூலம் பேசி உள்ளனர். ஜார்ஜ் தனது ஆதார் கார்டை பயன்படுத்தி மோசடி செய்திருப்பதாகவும், இது தொடர்பாக மும்பையில் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அந்த வழக்கில நீதிமன்ற அனுமதி பெற்று ஜார்ஜை கைது செய்ய உள்ளதாகவும், அவர்கள் மிரட்டி உள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க பணம் வேண்டும் என அந்த நபர்கள் மிரட்டி உள்ளனர்.

இதனை நம்பிய ஜார்ஜ், முதல் கட்டமாக 67 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். ஆனால் பணம் பெற்ற சில நாட்களிலேயே மீண்டும் ஜார்ஜை தொடர்பு கொண்ட அந்த நபர்கள், மேலும் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். ஜார்ஜின் வங்கி பரிவர்த்தனைகளை கண்டு சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர், இது மோசடியாக இருக்கலாம் என கருதி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு ஜார்ஜை அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து கோவை சைபர் கிரைம் போலீஸில் ஜார்ஜ் புகார் அளித்திருந்தார்.

ஜார்ஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த மோசடியில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் சர்மா, முகுல் சந்தல், அணில் ஜாதவ் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கோவை தனிப்படை போலீஸார் மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்திற்கு சென்று மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட லேப்டாப், செல்போன், சிம் கார்டுகள், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் மூவரையும் கோவைக்கு அழைத்து வந்த போலீஸார் அவர்களிடம் தொடர்விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது 12 மாநிலங்களில், 52 சைபர் கிரைம் காவல் நிலையங்களில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை பயன்படுத்தி 2.25 கோடி ரூபாய் அளவிற்கு இந்த கும்பல் பணப்பரிமாற்றம் செய்திருப்பது தெரியவந்தது. இந்த மோசடி கும்பல் பணப்பரிவர்த்தனைகளுக்காக பல்வேறு வங்கி கணக்குகளை வைத்திருந்துள்ளனர். மேலும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், ஆன்லைன் கிரைம் தொடர்பான மோசடியில் ஈடுபடுவதற்கு, தனியாக பயிற்சி பெற்று இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனி நபர்களை பணம் கேட்டு மிரட்டுவதற்கு ஒரு கும்பலாகவும், பெறப்படும் பணத்தை விரைவாக செல்போன் செயலிகள் மூலம் வேறு கணக்குகளுக்கு மாற்றுவதற்கு தனி கும்பலாகவும் இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதிகளில் இருந்து இந்த கும்பல் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் இன்று கோவையில் உள்ள ஜேஎம்-4 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். முதல் கட்டமாக இவர்களிடம் இருந்து 8 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டுள்ள போலீஸார், மீதி பணத்தையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

x