வீடு கட்டும் திட்டத்தில் சேர்க்காததால் விபரீதம்: சீர்காழி அருகே இளைஞர் தீக்குளிக்க முயற்சி


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திட்டை ஊராட்சிக்குட்பட்ட சிவனார்விளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் உமாசங்கர். பட்டதாரியான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை ஜெகநாதன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். தாயார் சிறுவயதிலேயே உயிரிழந்த நிலையில், பெற்றோர் யாருமின்றி தம்பியுடன் குடிசை வீடு ஒன்றில் வசித்து வருகிறார். இவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து அதிகாரிகளிடம் மனு அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், திட்டை ஊராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து இவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இதனை காரணமாக வைத்து, கலைஞரின் கனவு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இவரது மனுவை சேர்க்க திமுக ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றில் பலமுறை உமாசங்கர் மனு அளித்திருந்தார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பங்கேற்பதற்காக உமாசங்கர் வருகை தந்திருந்தார். அப்போது திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தன் உடலின் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

அப்போது தனது மனுவை பரிசீலிக்கக் கோரியும், திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர் முழக்கம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

x