நான்காவது மாடியிலிருந்து 4 வயது மகளை தூக்கி வீசிய தாய்: பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்


கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மனநலம் குன்றிய நான்கு வயது மகளை, கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து தூக்கி எறிந்து கொன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு சம்பங்கிராமநகர் காவல் நிலைய எல்லையில், நேற்று பல்மருத்துவர் சுஷ்மா பரத்வாஜ் தனது 4 வயது குழந்தையை நான்காவது மாடியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றிவிட்டனர். பல் மருத்துவராக இருக்கும் அந்த பெண், மனவளர்ச்சி குன்றிய குழந்தை தனது தொழில் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்ததாக விசாரணையின்போது தெரிவித்ததாக போலீஸார் கூறினர். மகளைக் கொன்ற சுஷ்மா மீது அவரது கணவர் கிரண் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு சிகேசி கார்டனில் உள்ள அத்வைத் ஆஷ்ரயா அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இந்த தம்பதியினர் வசித்து வந்தனர். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளிவந்துள்ளன. அதில் அந்த பெண் தனது மகளுடன் பால்கனியில் நடந்து சென்று பின்னர் திடீரென குழந்தையை கீழே வீசும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

முன்னதாக, சுஷ்மா தனது மகளை ரயில் நிலையத்தில் விட்டுவர முயன்றுள்ளார். இதுபற்றி அறிந்ததும் கிரண் உடனடியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு விரைந்து சென்று அவர்களது மகளை கண்டுபிடித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

x