ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆள்மாறாட்டம்; 12 பேர் கைது!


தர்பங்கா: பீகார் மாநிலத்தில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சிடிஇடி) ஆள் மாறாட்டம் செய்த 2 பெண்கள் உள்பட 12 பேரை அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆண்டுதோறும் தேசிய அளவில் அரசுத் துறையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் பல தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டம் செய்தவர்கள் பிடிபட்டனர்.

தேர்வு மையங்களில் தேர்வர்களின் பயோமெட்ரிக் கைரேகை ஸ்கேன் செய்யப்பட்டபோது, உண்மையான தேர்வர்களுக்குப் பதிலாக ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்த 2 பெண்கள் உள்பட 12 பேரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக தர்பங்கா எஸ்எஸ்பி ஜகுநாத் ரெட்டி கூறுகையில், "லஹேரியாசராய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெவ்வேறு மையங்களில் இருந்து 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதே சமயம் சதர் காவல் நிலையத்தின் கீழ் ஒரு மையத்தில் இருந்து 2 கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் பகதூர்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு மையத்தில் இருந்து கைது செய்யப்பட்டார்" என்றார். தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிடிபட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு மாநிலங்களுக்கு இடையேயான மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நடந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சிடிஇடி தேர்விலும் முறைகேடு செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x