நட்பாக பேசிப்பழகி அத்துமீறல்; வீடியோ எடுத்து சிறுமிக்கு மிரட்டல்: லாரி டிரைவர் போக்சோவில் கைது!


சிறுமியிடம் அத்துமீறிய வீடியோவைக் காட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர், போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். டிப்பர் லாரி ஓட்டுநரான இவர், தனது வீட்டின் அருகே குடியிருப்பவர்களிடம் நட்பாகப் பேசி பழகி வந்துள்ளார். அடிக்கடி பக்கத்து வீட்டிற்குச் செல்லும் பால்ராஜ் அந்த வீட்டில் உள்ள 9ம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாதபோது அந்த வீட்டிற்குள் நுழைந்த பால்ராஜ், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். அவரின் வக்கிர புத்தியால் இதை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்திருந்தார். நடந்ததை வெளியில் சொன்னால் வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.

மேலும் செல்போனில் இருந்த வீடியோவைக்காட்டி அவரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் வீட்டிற்குச் சென்ற பால்ராஜ் வழக்கம் போலச் சிறுமியை அழைத்துள்ளார். இதைக் கண்ட சிறுமியின் தாய் அந்த சிறுமியிடம் விசாரித்துள்ளார். இதையடுத்து தன்னை வீடியோ எடுத்து தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவருவதாக அந்த சிறுமி தாயிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மதுக்கரை காவல்நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் பால்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். இதனையடுத்து அவர் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

x