‘யூடியூப் பார்த்துதான் ஒயின் தயாரித்தேன்’ - போலீஸிடம் மாணவன் சொன்ன அதிர்ச்சித் தகவல்!


கேரளாவில் யூடியூப் பார்த்துத் தயாரித்த ஒயினைக் குடித்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், மாணவர் தயாரித்த ஒயினைக் கைப்பற்றிய காவல்துறையினர் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள பள்ளியில் படித்து வரும் 12 வயது மாணவன் ஒருவன் யூடியூப் பார்த்து, ஒயின் தாயாரித்துள்ளார். வீடியோவில் குறிப்பிட்டபடி வீட்டிலிருந்த திராட்சைப் பழங்களைக் கொண்டு அவர் இந்த ஒயினை தயாரித்துள்ளார். தான் தயாரித்த ஒயினைப் பள்ளிக்கு எடுத்துச் சென்ற அந்த மாணவன் சக மாணவனுக்கு அதனைக் கொடுத்துள்ளார். அந்த மாணவனும் ஒயினை வாங்கிக் குடித்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த அந்த மாணவனுக்குச் சிறிது நேரத்திலேயே கடுமையான வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பதறிப்போன சிறுவனின் பெற்றோர் அந்த மாணவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விவகாரம் அப்பகுதி காவல்துறையினருக்குத் தெரியவர, ஒயின் தயாரித்த மாணவனின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் தயாரித்து வைத்திருந்த ஒயினின் மாதிரியைப் பரிசோதனைக்காக காவல்துறையினர் எடுத்துச் சென்றனர். திராட்சைப் பழத்தை வைத்தே ஒயின் தயாரித்ததாகவும், போதைக்காக வேறு பொருட்களை அதில் சேர்க்கவில்லை எனவும் ஒயின் தயாரித்த மாணவன் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

ஆய்வுக்குப் பின்னர் தான் இதில் என்னென்ன கலக்கப்பட்டது என்று தெரியவரும். மாணவன் சட்டவிரோத செயலில் ஈடுபட்டது தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவர் வீடு திரும்பியுள்ளார்.

x