காணாமல் போன தர்மஸ்தலா சங்கத்தின் சேவைப் பிரதிநிதி பூஜா கொலை செய்யப்பட்டு உடல் காட்டில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தில் தீர்த்தஹள்ளி வட்டத்தில் உள்ள அகும்பை கிராமத்தைச் சேர்ந்தவர் குஷால். இவரது மகன் பூஜா(24). இவர் தர்மஸ்தலா சங்கத்தின் சேவை பிரதிநியாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூன் 30-ம் தேதி வேலைக்குச் சென்ற பூஜா திடீரென காணாமல் போனார். அவர் வீடு திரும்பாததால், பூஜாவின் தந்தை குஷால், அகும்பே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீஸார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பூஜாவை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் அகும்பே வனப்பகுதியில் பூஜாவின் உடல் போலீஸாரால்
கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது பூஜா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பூஜாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை ஆராய்ந்து, போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது நாலூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் அடிக்கடி பூஜாவுடன் செல்போனில் பேசியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார், மணிகண்டனை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பூஜாவும், அவரும் நீண்ட நாள் நண்பர்கள் என்றும், பணப்பிரச்சினையில் பூஜாவை மணிகண்டன் கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசியதும் தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.