பாமக பிரமுகரை வெட்டிய 5 பேர் கைது: முன்விரோதத்தால் தாக்குதல் நடத்தியதாக தகவல்


கைது செய்யப்பட்ட வெங்கடேசன், சதீஷ், முகிலன்

கடலூர்/சென்னை: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (எ) சிவசங்கர் (43). பாமக பிரமுகரான இவர், கேபிள் டிவி தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த சிவசங்கரை, பைக்குகளில் வந்தமர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிவசங்கர், பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், பாமக பிரமுகரைத் தாக்கிய வழக்கில் தொடர்புடைய திருப்பாதிரிபுலியூர் எஸ்.என்.சாவடி சின்னபொண்ணு நகரைச் சேர்ந்த சதீஷ் (27), ஐய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவெங்கடேசன் (28), கம்மியம்பேட்டை கெடிலம் நகரைச் சேர்ந்த கெளசிக் (18), மஞ்சக்குப்பம் தட்சிணாமூர்த்தி நகரைச் சேர்ந்த முகிலன் (19), செம்மண்டலம் தீபன் நகரைச் சேர்ந்த ராஜ்கிரண் (34) ஆகிய 5 பேரை திருப்பாதிரிபுலியூர் போலீஸார் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர்.

ராஜ்கிரன், கொளசிக்

எஸ்.என்.சாவடியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன்கள் சிவசங்கர், விஜய்பிரபு ஆகியோருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன், சதீஷ், வெங்கடேசன் ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இதனால் சிவங்கரின் தம்பி விஜய்பிரபுவை (35), சதீஷ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கடந்த 2021 பிப். 29-ம் தேதி தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தனர். இந்த வழக்கில் சிவசங்கர் முக்கிய சாட்சியாக இருப்பதாலும், வழக்கை முன்னின்று நடத்துவதாலும் அவரைக் கொலைசெய்யத் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, நேற்று மதியம் 5 பேரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.

ராமதாஸ் கண்டனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைதளப்பதிவில், "கடலூர் பாமக நிர்வாகி சிவசங்கர் மீதான கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. தொடர் கொலைகளால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. சிவசங்கரை கொல்ல முயன்றவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

x