காஞ்சியை மிரட்டும் கஞ்சா பிசினஸ்!


கோயில் மாநகரம் என்று கொண்டாடப்படும் காஞ்சிபுரத்தில் கஞ்சா புழக்கம் இப்போது கொடிகட்டிப் பறக்கிறது. இதனால், கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் நிகழ்த்தும் குற்றங்களைத் தடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது காவல் துறை

அண்மைக் காலமாக வடமாவட்டங்களில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கஞ்சாவை சர்வசாதாரணமாக கையாள ஆரம்பித்திருப்பதால் குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்ட வடக்கு மண்டல காவல் துறை நண்பர் ஒருவர் சொன்ன செய்திகள் அனைத்தும் அதிர்ச்சி ரகம். “ஆந்திராவிலிருந்து ரயிலில் கடத்திவரப்படும் கஞ்சாவை அரக்கோணத்தில் வைத்து எல்லை பிரிக்கிறார்கள். அப்பகுதியில் இருக்கும் குறிப்பிட்ட சில பெண்களும் இளைஞர்களும் காஞ்சா கடத்தலுக்கு ஸ்லீப்பர் செல் கணக்காய் உதவுகிறார்கள். இவர்கள் கல்லூரி மாணவர்களாக வும், காய் - கனிகள் விற்கும் பெண்களாகவும் அவதாரம் எடுத்து கஞ்சாவை சேர்க்க வேண்டிய இடங்களுக்கு கச்சிதமாய் கொண்டு போய் சேர்த்துவிடுகிறார்கள். இதெல்லாம் ரயில்வே போலீசுக்கும் லோக்கல் போலீசுக்கும் நல்லாவே தெரியும். இருந்தாலும் கண்டுக்கமாட்டாங்க. கண்டுக்காத அளவுக்கு ‘கவனிப்பு’கள் நடந்துரும்.

இப்படி, வடமாவட்டங்களுக்கான ‘கஞ்சா ஹப்’பாக செயல்படும் அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், நடுவீரப்பட்டு, சுங்குவார்சத்திரம், மணிமங்கலம், படப்பை, சோமமங்கலம், இருங்காட்டுக் கோட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், காட்டாங்கொளத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தங்குதடையில்லாம கஞ்சா சப்ளை ஆகுது.” என்று சொன்னார் அந்த காவல் நண்பர்.

காஞ்சிபுரம் பகுதியில் இந்தத் தொழில் இருக்கும் பிரபல புள்ளிகள் குறித்தும் பேசிய அவர், “காஞ்சிபுரம் பல்லவமேடு பகுதியைச் சேர்ந்த ஆனை (எ) ஆனந்தன் குடும்பம், பாபு தியேட்டர் பகுதியைச் சேர்ந்த ஓர் அரசியல் புள்ளி, திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி தினேஷின் ஆதரவாளர் ஒருவர். இந்த மூவரும் தான் காஞ்சிபுரம் கஞ்சா விற்பனைக்கு இப்ப மெயின் டிஸ்டிரிபியூட்டர்ஸ். இவர்களுக்குக் கீழே குட்டிக் குட்டியாய் ஏராளமான சப் டிஸ்டிரிபியூட்டர்ஸ் இருக்காங்க. இவங்க தான் கஞ்சாவை களத்துக்குக் கொண்டுபோய் காசாக்குறவங்க.

ஒரு காலத்துல சப் டிஸ்டிரிபியூட்டர்களாக இருந்தவங்க எல்லாம் தொழில் நுணுக்கத்தைத் தெரிஞ்சுக்கிட்டு இப்ப மெயின் டீலர் ஆகிட்டாங்க. ரவுடி தினேஷின் கூட்டாளியான பொய்யாகுளம் தியாகு தான் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கஞ்சாவை புழக்கத்தில் விட்டவன். குறிப்பிட்ட அந்த பல்கலைக்கழகத்து மாணவர்களை கஞ்சாவுக்கு அடிமையாக்கி அவர்களை குற்றச் செயல்களில் ஈடுபட வெச்சதுல தியாகுவுக்கு பெரும் பங்கு உண்டு” என்றார்.

முன்பு காஞ்சிபுரம் எஸ்பி-யாக இருந்த சாமுண்டீஸ்வரி காஞ்சிபுரத்தில் கஞ்சா புழக்கத்தை அடியோடு ஒழிக்க அதிரடி ஆக்‌ஷனில் இறங்கினார். கஞ்சாவுக்கு அடிமையான பள்ளி- கல்லூரி மாணவர்களின் பெற்றோரைத் தனியாக அழைத்துப் பேசிய சாமூண்டீஸ்வரி, “இனியும் கஞ்சா புகைப்பதை உங்கள் பிள்ளைகள் நிறுத்தாவிட்டால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வோம். அவர்களைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது” என எச்சரித்தார்.

அத்தோடில்லாமல், கஞ்சாவுக்கு அடிமையான மாணவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க அவர்களுக்கு கவுன்சலிங்கும் கொடுக்கப்பட்டது. பள்ளிக்குச் செல்ல முடியாத சூழலுக்கு ஆளாகும் சிறுவர்களை தங்களது கேங்கில் இணைத்துக் கொள்ளும் ரவுடிகள், அவர்களுக்கு மது, கஞ்சா, பணம் உள்ளிட்டவற்றைக் கொடுத்து, சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். இவர்களையும் மீட்கும் வகையில் ‘பாய்ஸ் க்ளப்’ என்ற அமைப்பையும் தொடங்கிய சாமூண்டீஸ்வரி, அத்தகைய மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளைக் கொடுக்க ஏற்பாடு செய்தார். இடைநின்ற மாணவர்கள் மீண்டும் படிப்பைத் தொடரவும் ஏற்பாடு செய்தார். இன்னொரு பக்கம், எந்தத் தயவு காட்டாமல் கஞ்சா வியாபாரிகள் மீதும் வழக்குப் போட்டு உள்ளே தள்ளினார். இதனால் காஞ்சியில் கஞ்சா புழக்கம் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. ஆனால், சாமூண்டீஸ்வரி மாறுதலானதும் பழையபடி கஞ்சா வியாபாரிகள் கடை திறக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்றைய தேதியில் காஞ்சிபுரம் ஏரியாவில் கஞ்சா புழக்கம் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. “நான் சிக்கிக் கொண்டால் நீ பார்த்துக்கோ” என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டு கஞ்சா வியாபாரிகள் தொழில் திளைக்கிறார்கள். இதனால் காஞ்சிபுரம் ஏரியாவில் பிற குற்றங்களும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் தற்போதைய எஸ்பி-யான சுதாகரும் கஞ்சாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார். ஆனாலும் காவல் துறையில் இருக்கும் ‘வாங்கியே’ பழக்கப்பட்ட சில கைகள் கஞ்சா வியாபாரிகளுக்கே விசுவாசமாக இருப்பதால் எஸ்பி நினைப்பது நடக்கவில்லை என்பதுதான் நிஜம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் “மகனே பெற்றோரை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் இப்போது அதிகமாக நடக்கிறது. அந்தளவுக்கு இளைய சமுதாயம் சீரழிய கஞ்சாவும் மதுவும் தான் காரணம். அரசின் கூர்நோக்கு இல்லங்களில் இருக்கும் சிறுவர்களும் கஞ்சாவுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கஞ்சா எங்கிருந்து, எப்படி கிடைக்கிறது? வாகனங்களில், வக்கீல், பிரஸ், போலீஸ் என போலியான ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு கஞ்சா வியாபாரம் செய்கிறார்கள். காஞ்சிபுரத்தில் கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் மாவட்ட எல்லைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அத்தகைய பணிகளில் நேர்மையான காவலர்களை நியமிக்க வேண்டும். அதேசமயம், சமுதாயத்தைச் சீரழிக்கும் கஞ்சா வியாபாரிகளைத் தேடிக் கண்டுபிடித்து ஜாமீனில் வரமுடியாத படி தகுந்த வழக்குகளை பதிவு செய்து அவர்களை உள்ளே தள்ள வேண்டும்” என்றார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி-யான சுதாகரிடம் பேசினோம், “கஞ்சா தொடர்பான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். கல்லூரிகளிலும், சந்தேகப்படும்படியான இடங்களிலும் தொடர்ச்சியாகச் சோதனை நடத்தி வருகிறோம். மாவட்டத்தில் பெரும்பாலான கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா குறித்து புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். எனவே, பொதுமக்களும் பொத்தாம் பொதுவில் குற்றச்சாட்டை வைக்காமல், நேரடியாகப் புகார் தெரிவித்தால் நல்லது” என்றார் அவர்.

கஞ்சா மாதிரியான போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தினாலே மற்ற குற்றங்கள் தானாகவே கட்டுக்குள் வந்துவிடும். செய்யுமா காஞ்சிபுரம் காவல்துறை?

x