சென்னை, நெல்லை, மதுரை உட்பட 8 மாவட்டங்களில் போலீஸ் என கூறி வழிப்பறி செய்த இளைஞர் கைது


விக்னேஷ்

சென்னை: சென்னை, நெல்லை, மதுரை உட்பட 8 மாவட்டங்களில் போலீஸ் என கூறி வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞர் ஒருவரை மெரினா போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கொட்டிவாக்கம், வேம்புலி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (43). ராபிடோ பைக் டாக்ஸி ஓட்டி வருகிறார். இவர் கடந்த மாதம் 21-ம் தேதி இரவு மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் பின்புறம் கடற்கரையில் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த டிப் டாப் உடையணிந்த இளைஞர் ஒருவர், தன்னை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டார். ‘மெரினாவுக்கு பெண் தோழியுடன் வந்தாயா? உன்னை பார்த்தால் சந்தேகமாக உள்ளது.

காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தால் உண்மை தெரிந்து விடும். எனவே, காவல் நிலையம் வா' என அழைத்தார். மேலும், சோதனை என்ற பெயரில் குமரவேலிடமிருந்த செல்போன், ரூ.8,500, டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை பறித்துக் கொண்டு காவல் நிலையம் வந்து பெற்றுச் செல்லவும் என கூறிவிட்டு அந்த ஆசாமி அங்கிருந்து சென்றார். பயந்துபோன குமரவேல் மெரினா காவல் நிலையம் சென்று விசாரித்த போது தான், தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது. இது குறித்து உடனடியாக புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இதில், குமரவேலிடம் போலீஸ் என கூறி வழிப்பறி செய்தது திருப்பத்தூர் மாவட்டம் திருமால் நகரைச் சேர்ந்த விக்னேஷ் (26) என தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், விசாரணையில் கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது தமிழகத்தில் திருப்பத்தூர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட 8 மாவட்டங்களில் பல்வேறுகுற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. குறிப்பாக போலீஸ் என கூறி வழிப்பறியில் ஈடுபடுவதை வழக்கமாக அவர் கொண்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

x