பஞ்சாப் பாடகர் சித்து மூஸேவாலா கொலையில் தொடர்புடைய இரண்டு பேர் இன்று நடந்த போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 2 நபர்கள் அமிர்தசரஸின் பாக்னா கிராமத்தில் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு இன்று தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற போலீஸாருக்கும், குற்றம் சட்டப்பட்ட கும்பலுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. சித்து மூஸே வாலாவைக் கொன்ற சிசிடிவி காட்சிகள் மூலம் பஞ்சாப் காவல்துறை அடையாளம் கண்டுள்ள மன்பிரீத் மன்னு குஸ்ஸா மற்றும் ஜக்ரூப் ரூபா ஆகியோர் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த என்கவுன்டரில் ஜக்ரூப் ரூபா மற்றும் மன்ப்ரீத் மனு குஸ்ஸா ஆகிய இருவரும் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூட்டில் மூன்று போலீசார் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ரூபா மற்றும் குஸ்ஸா இருவரும் ஜக்கு பகவான்புரியா கும்பலைச் சேர்ந்தவர்கள். ஜக்கு பஞ்சாபின் மஜா பகுதியில் செயல்படுகிறார் என்றும், இவர் கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் குழுவின் ஒரு பகுதியாக உள்ளார் என்றும், மூஸே வாலாவின் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் முக்கிய மூளையாக செயல்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள இந்தப் பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சித்து மூஸேவாலா மே 29 அன்று பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 14 அன்று புதிதாக நியமிக்கப்பட்ட பஞ்சாப் காவல்துறை இயக்குநர் கௌரவ் யாதவ், மான்சா மாவட்டத்தில் உள்ள மூஸே வாலாவின் குடும்பத்தைச் சந்தித்து, கொலை வழக்கின் விரைவான விசாரணைக்கு உறுதியளித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த என்கவுன்டர் நடந்துள்ளது.