போலீஸ் வாகனத்துக்கு தீவைப்பு; வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு: போர்க்களமாக மாறிய கள்ளக்குறிச்சி!


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளிக்கு முன்பாக குவிந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடத்தொடங்கியுள்ளனர். இந்த போராட்டம் இப்போது பலத்த கலவரமாக மாறியுள்ளது.

ஜூலை 13-ம் தேதி தனியார் பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்பட்ட நிலையில், இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், பள்ளி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

5 நாட்களாக அமைதியாக நடந்துவந்த போராட்டம் இன்று கலவரமாக மாறியதையடுத்து காவல்துறையினர் முதலில் தடியடிக்கு உத்தரவிட்டனர். இந்த நிலையில் கலவரக்காரர்கள் போலீஸாரின் வாகனத்துக்கு தீவைத்துள்ளனர், இதனால் போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளிக்குள் புகுந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடத் தொடங்கியுள்ளனர். போராட்டம் நடந்த இடத்தில் போதிய அளவில் காவல்துறையினர் இல்லை என சொல்லப்படுகிறது.

போராட்டக்காரர்கள் கல்வீசித்தாக்கியதில் எஸ்.பி செந்தில் குமார், டிஐஜி பாண்டியன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்தும் காவல்துறையினர் சின்னசேலம் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரம் காரணமாக சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

x