காதல் திருமணம் செய்த மகளை தீ வைத்து எரித்துக் கொன்ற தந்தை!


வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்த மகளை தீ வைத்து எரித்துக் கொன்றதாக பெண்ணின் தந்தை, சகோதரர் உள்பட 12 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜலவார் மாவட்டத்தில் இந்த ஆணவக்கொலை நடைபெற்றுள்ளது. ஜலவாரைச் சேர்ந்த சிம்லா குஷ்வா(24) என்ற இளம்பெண் வேறு சாதியைச் சேர்ந்த ரவீந்திர பில்(26) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதற்கு குஷ்வாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலர்கள் இருவரும் ஊரை விட்டு வெளியேறி உத்தரப்பிரதேசம் மாநிலம், காஜியாபாத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அதன் பின்னர், ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள சௌர்தி கிராமத்தில் கணவன், மனைவி வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கள் வீட்டின் அருகே ஹர்னாவத்ஷாஹாஜி பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து பணம் எடுக்க குஷ்வாவும், அவரது கணவர் ரவீந்திர பில்லும் சென்றுள்ளனர். அப்போது குஷ்வாவை அவரது தந்தை, சகோதரர் மற்றும் அவரது உறவினர்கள் என மூன்று பேர் கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து உள்ளூர் போலீஸாருக்கு ரவீந்தி பில் தகவல் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து ஜலாவரில் உள்ள ஜாவர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து குஷ்வாவை தேடி வந்தனர். இந்த நிலையில், சோரிட் கிராமத்தில் எரிந்த நிலையில் குஷ்வாவின் உடல் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்ற போது 80 சதவீதம் எரிந்த நிலையில் சிம்லா குஷ்வா உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக ஹர்னவத்ஷாஹாஜி டிஎஸ்பி ஜெய் பிரகாஷ் அடல் கூறுகையில், "சிம்லா குஷ்வா வேறு சாதியைச் சேர்ந்த ரவீந்திர பில்லை திருமணம் செய்து கொள்ள பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த ஆணவக்கொலை நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர் உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.

x