மயானத்தில் அழுகுரல்...பேய் என பயந்த கிராம மக்கள்: பெற்ற தாயே 3 வயது மகளை உயிருடன் புதைத்த கொடுமை!


பிஹார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள மயானத்தில் மூன்று வயது சிறுமியை அவரது தாயே உயிருடன் புதைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

பிஹாரின் சரண் மாவட்டத்தில் உள்ள கோபா காவல் நிலையத்திற்கு உட்பட்ட மர்ஹா ஆற்றின் கரையில் உள்ள மயானத்திற்கு அருகில் சில பெண்கள் நேற்று காலை விறகு சேகரித்துக் கொண்டிருந்தபோது, ​​மயானத்தில் இருந்து அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. முதலில் பேய் என நினைத்து பயந்த கிராம மக்கள் பின்னர் யாரோ மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்டதை உணர்ந்தனர். அதன்பின்னர் அவர்கள் ஒன்றுகூடி களிமண்ணை தோண்டிவிட்டு பார்த்தபோது சிறுமி உயிருடன் புதைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அச்சிறுமியின் வாயில் களிமண்ணை அடைத்து வைத்திருந்ததையும் அவர்கள் கண்டனர்.

சிறுமியை மீட்ட கிராம மக்கள் உடனடியாக கோபாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்கு பின்னர் பேசிய பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெயர் லாலி என்றும், தனது பெற்றோர் ராஜு சர்மா மற்றும் ரேகா ஷர்மா என்றும் கூறினார். ஆனால் அந்த சிறுமிக்கு தனது கிராமத்தின் பெயரை சொல்லத் தெரியவில்லை.

மேலும்,"என் அம்மாவும், என் தாய்வழி பாட்டியும் என்னை கல்லறைக்கு அழைத்து வந்தனர். நான் அழுதுகொண்டே இருந்ததால் அவர்கள் என் வாயில் களிமண்ணை திணித்து குழிதோண்டி புதைத்தனர்" என்று அச்சிறுமி மருத்துவ அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் கூறினார். தற்போது அவரது பெற்றோர் மற்றும் கிராமத்தை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

x