பழிக்கு பழி... ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!


பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங்

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவரும், ஆற்காடு சுரேஷ் என்பவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இருவர் மீதும் ஏராளமான கொலை வழக்குகள், கட்டப்பஞ்சாயத்துகள் மற்றும் பிற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் இவர்களுக்கும் வேறு ஒரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாதவனுடன் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிக்கு இருவரும் உணவு அருந்த சென்றுள்ளனர்.


அப்போது ஆற்காடு சுரேஷை சூழ்ந்த மர்ம நபர்கள் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவத்தின் போது மாதவன் மீதும் அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், அவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக மாதவன் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரோட்டா கடை ஒன்றில் அமர்ந்திருந்த மாதவனை, மர்ம நபர்கள் வெட்டிச் சாய்த்தனர். இந்த இரு வழக்குகள் தொடர்பாகவும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜோகன் கென்னடி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 8 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதனிடையே இந்த வழக்கில் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து சந்தேகிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை காவல்துறையை எச்சரித்ததாகவும், இது தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்குக்கு போலீஸார் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். இதில் படுகாயம் அடைந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்தார். இதனிடையே அவரது உடலில் 30க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு இருப்பதோடு அவை மிகவும் ஆழமாக பதிந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆற்காடு சுரேஷ் மற்றும் மாதவன் படுகொலை செய்யப்பட்ட அதே முறையில், தற்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வழக்கு தொடர்பாக 8 பேர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில், அதில் ஒருவர் ஆற்காடு சுரேஷின் சகோதரர் என்று குறிப்பிடத்தக்கது. இதனால் ஆர்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்டிராங்க் மற்றும் ஆற்காடு சுரேஷுக்கு இடையே ஆரூத்ரா பண மோசடி விவகாரத்தில் தான் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பணத்தை பெற்றுத் தருவதில் ஏற்பட்ட தகராறு பின்னர் முன்விரோதமாக மாறியுள்ளதாக தெரிகிறது. இதனிடையே சென்னையில் அடுத்தடுத்து பழிக்கு பழி கொலைகள் நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் வீடு அமைந்துள்ள பெரம்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

x