போலீஸ் விசாரணை என அழைத்துச் சென்று கொடூரமாகக் கொல்லப்பட்ட ரவுடி


கொலை

போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறி ரவுடியை அழைத்துச் சென்ற கும்பல், அவரைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டத்தின் புதூர் மலைமேடு பகுதியில் இன்று காலை ஒரு கை, இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடந்தது. இதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து வானவரம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து விசாரணை நடத்தியதில், இறந்துகிடந்தவர் இராணிப்பேட்டை மாவட்டம் கூத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சரத்குமார் என்பது தெரியவந்தது. இவர் மீது இராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களிலும் திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளன. காவல் துறையின் ரவுடிப் பட்டியலிலும் சரத்குமாரின் பெயர் உள்ளது.

அவருக்கும், வேறுசிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இந்தக் கும்பல் கடந்த மாதமே சரத்குமாரைக் கொல்ல முயன்றது. ஆனால் அவர் நூழிலையில் உயிர் தப்பியுள்ளார். 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின்பு கடந்த வாரம்தான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு, சரத்குமார் வீட்டிற்கு மூன்று பேர் வந்துள்ளனர். அவர்கள் தங்களை திருவள்ளூர் காவல் நிலையத்திலிருந்து வருவதாக அறிமுகப்படுத்திக்கொண்டு விசாரணைக்கு வருமாறு சரத்குமாரை அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் தான் சரத்குமார் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இராணிப்பேட்டை எஸ்.பி தீபா சத்யன் இதுகுறித்து விசாரிக்க இரு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் விசாரணை எனும் பெயரில் அழைத்துச் சென்று ரவுடியைக் கொலை செய்தவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

x