வீட்டிலேயே துப்பாக்கி தயாரிப்பு: அதிர்ந்துபோன போலீஸார்!


நீலகீரி மாவட்டத்தில் சோமன் என்பவர் வீட்டிலேயே துப்பாக்கித் தயாரிப்புப் பட்டறை நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து போலீஸாரே அதிர்ச்சியடைந்தனர். தலைமறைவாக இருக்கும் சோமனையும் தேடிவருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் அருகில் உள்ளது சப்பந்தோடு. இங்கு ரகசியமாக துப்பாக்கித் தயாரிப்புப் பட்டறை ஒன்று இயங்கிவருவதாக எஸ்.பி-யின் தனிப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி செந்தில்குமார், சேரம்பாடி காவல் ஆய்வாளர் அமுதா ஆகியோர் நேரில் சென்று ஆய்வுசெய்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் உள்ள சோமன் என்பவரது வீட்டில் துப்பாகியும், துப்பாக்கி செய்யப் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களும் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே, போலீஸார் வருவதைத் தெரிந்து சோமன் முன்பே தலைமறைவாகிவிட்டார். ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டு துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட சோமன், குண்டர் சட்டத்திலும் கைதாகி இருந்தார். இதேபோல் கேரள வனப்பகுதிகளில் மிருகங்களை வேட்டையாடியவர்களுக்குத் துப்பாக்கி செய்து கொடுத்ததாக கேரள வனத் துறையிலும் அவர் மீது வழக்கு உள்ளது. வேறு யாருக்கெல்லாம் அவர் துப்பாக்கி செய்துகொடுத்தார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

x