பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை - சென்னையில் பரபரப்பு


சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் சென்னையில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

சென்னையை அடுத்த செம்பியம் பகுதியில் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்தபோது, அவர் மீது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து மர்ம கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், 2000ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் இருக்கிறார். இவர் 2006ம் ஆண்டு,சுயேட்சையாக போட்டியிட்டு சென்னை மாமன்ற உறுப்பினரானார்.2007-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

x