திருச்செந்தூர் அருகே ரூ.40 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: இலங்கைக்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு 


திருச்செந்தூர் அருகே பீடி இலை பண்டல்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான 3 டன் பீடி இலை பண்டல்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கடலோர பாதுகாப்புக் குழும போலீஸ் டிஎஸ்பி-யான பிரதாப்பன் உத்தரவின்பேரில் ஆய்வாளர் சைரஸ் தலைமையிலான போலீசார் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை திருச்செந்தூர் அருகே ஆலந்தலை கடற்கரை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரையில் இருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த லாரியை போலீஸார் சோதனை செய்தனர்.

அப்போது அந்த லாரியில் 87 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் தலா 35 கிலோ எடை கொண்ட சுமார் 3 டன் பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. போலீஸாரை கண்டதும் லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில், பீடி இலை பண்டல்களை படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பீடி இலை பண்டல்கள் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ.40 லட்சம் என கூறப்படுகிறது. தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.