சொந்த வீட்டில் 52 பவுன் நகையை திருடி ஆன்லைன் ரம்மி; ஆடம்பரமாக வாழ்ந்த சிறுவன்...நடந்தது என்ன?


மதுரையில் ஓட்டல் அதிபரின் மகன் சொந்த வீட்டிலேயே 52 பவுன் நகைகளைத் திருடி ஆடம்பரமாக வாழ்ந்தது தெரியவந்துள்ளது. போலீஸார் அந்தச் சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை நாகமலை புதுக்கோட்டை பல்கலையைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் வீட்டில் வைத்திருந்த 52 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து செல்லப்பாண்டி, நாகமலை புதுக்கோட்டை போலீஸில் புகார்கொடுத்திருந்தார். வீட்டு வேலையாள்கள் தொடங்கி, அடிக்கடி வந்து சென்றவர்கள் வரை அனைவரிடமும் விசாரணை நடத்தியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தான் செல்லப்பாண்டியின் மகன் மீது(மைனர் என்பதால் பெயர் குறிப்பிடப்படவில்லை) போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. 9 ஆம் வகுப்புப் பயிலும் அந்தச் சிறுவன் அண்மைக்காலமாக தன் கையில் அதிகளவில் பணம் வைத்து, ஆடம்பரமாக செலவு செய்து வந்தது தெரியவந்தது. சிறுவனை போலீஸார் விசாரித்தபோது, “ஆன்லைன் விளையாட்டில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. நண்பன் ஒருவனிடம் பணம் கேட்டேன். அவன் தான் கோச்சடையில் ஒரு அண்ணன் உள்ளார். அவரிடம் நகைகள் கொடுத்தால் பணம் கொடுப்பார் என்றார். அப்படித்தான் வீட்டில் இருந்து 52 பவுன் நகைகளை எடுத்து விற்று ஆன்லைன் ரம்மி விளையாடினேன், ஆடம்பரமாகச் செலவு செய்தேன்”எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து கோச்சடையில் நகைகள் வாங்கிய வாலிபரைக் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டிவருகின்றனர்.

x