டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளம்பெண்: 5.7 கோடி ரூபாயை இழந்த வங்கி மேலாளர்!


‘டேட்டிங் ஆப்’ மூலம் அறிமுகமான இளம்பெண்ணிடம், வாடிக்கையாளர்களின் பணத்தைக் கையாடல் செய்து ரூ.5.7 கோடியை இழந்த வங்கி மேலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு அனுமந்தநகர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியின் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஹரிசங்கர். அந்த வங்கியின் வாடிக்கையாளரான அனிதா என்பவர் தனது கணக்கில் 1.3 கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளார். மேலும், இந்த டெபாசிட் தொகையை வைத்து அவர் 75 லட்சம் ரூபாய் கடனாகவும் பெற்றுள்ளார். இந்த கடனுக்காக அனிதா பல்வேறு ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்துள்ளார். இந்த நிலையில் தனது ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்திப் பல கட்ட தவணைகளாக 5.7 கோடி ரூபாய் அளவிற்குக் கடன் பெற்றுள்ளது அனிதாவுக்குத் தெரியவந்தது.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அனிதா வங்கியின் உயர் அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் மோசடி சம்பவங்கள் நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்தது. மே மாதம் 13ம் தேதியிலிருந்து 19ம் தேதி வரை அனிதாவின் டெபாசிட் தொகை மூலமாக அவரது பெயரில் 5.70 கோடி ரூபாய் அளவிற்குக் கடன் பெற்றிருப்பதும், அந்த பணம் பெங்களூருவில் உள்ள வங்கியிலிருந்து கர்நாடகத்தில் உள்ள இரண்டு வங்கிகளுக்கும், மேற்கு வங்காளத்திலுள்ள 28 வங்கிக் கணக்குகளுக்கும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் வங்கி மேலாளர் ஹரிசங்கர் இந்த கையாடலில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து, வங்கி உயர் அதிகாரிகள் காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில், வங்கி மேலாளர் ஹரிசங்கர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடைபெற்ற விசாரணையில், 'டேட்டிங்' செயலி மூலமாக இளம்பெண் ஒருவருடன் ஹரிசங்கர் பழகி வந்ததாகவும், இதனைப் பயன்படுத்தி அந்த பெண் தன்னிடமிருந்து 5.70 கோடி அளவிற்குப் பணத்தை மோசடி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேரில் பார்க்காத ஒருவருக்காக அவர் இவ்வளவு பெரும் தொகையை இழப்பதற்கு வாய்ப்பில்லை என்பதாலும், வங்கி மேலாளராக பணிபுரிபவருக்கு சைபர் குற்றங்கள் பற்றி நன்கு தெரியும் என்பதாலும் ஹரிசங்கரின் வாக்கு மூலத்தை காவல்துறையினர் நம்புவதாக இல்லை. அவருக்குப் பின்னால் பெரிய மோசடி கும்பல் செயல்பட்டு வரலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

x