மனைவிக்கு உடல்நிலை சரியில்லை; ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்: திருடிய வீட்டில் உருக்கமாக கடிதம் எழுதிவைத்த திருடன்


தூத்துக்குடி மெஞ்ஞானபுரத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் திருடிய நபர் எழுதிவைத்த கடிதம்.

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் திருடிய நபர், உருக்கமாக கடிதம் எழுதிவைத்துச் சென்றுள்ளார்.

திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்தவர் ஜே.சித்திரை செல்வின் (70). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவியும் ஓய்வுபெற்ற ஆசிரியர்.

சித்திரை செல்வினும், அவரது மனைவியும் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு கடந்த 17-ம் தேதி சென்றுள்ளனர். வீட்டில் உள்ள செடிகளைப் பராமரிப்பதற்காக, செல்வி என்ற பெண்ணை பணிக்கு நியமித்துள்ளனர்.

கடந்த 25-ம் தேதி மாலை 4.30 மணியளவில் அந்த வீட்டுக்குச் சென்ற செல்வி, கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த சித்திரைச் செல்வின் மறுநாள்வீடு திரும்பியபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் ரொக்கம், ஒன்றரை பவுன் தங்க கம்மல், ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மெஞ்ஞானபுரம் போலீஸார் வழக்கு்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நகை, பணத்தைதிருடியவர் ஒரு கடிதம் எழுதி வைத்துச் சென்றது தற்போது தெரியவந்துள்ளது. வீட்டில் கிடந்தபழைய கவர் ஒன்றில் பச்சை நிற மையால், என்னை மன்னித்துவிடுங்கள். நான் இன்னும் ஒருமாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன். என் வீட்டில் உடம்பு சரியில்லை. அதனால்தான் திருடிவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.