கடன்தொல்லை; அவமானத்தால் ஒரே குடும்பத்தில் 9 பேர் தற்கொலை: 13 பேர் அதிரடி கைது


கைது

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள மைசால் என்னும் ஊரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் நேற்று தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் இன்று 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மைசால் கிராமத்தை சேர்ந்த மானிக் எல்லப்பா ஆசிரியராக உள்ளார், அவரின் சகோதரர் போபட் எல்லப்பா கால்நடை மருத்துவராக உள்ளார். இவர்கள் மற்றும் இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேர் அருகருகே உள்ள இரண்டு வீடுகளில் நேற்று இறந்து கிடந்தனர். தற்கொலை செய்துகொண்ட இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலை குறிப்புகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சகோதரர்கள் இருவரும் பல்வேறு நபர்களிடம் அதிக அளவில் கடன் வாங்கியிருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய சாங்லி காவல் கண்காணிப்பாளர் தீக்சித் கெடம், "கைப்பற்றப்பட்ட தற்கொலைக் குறிப்புகளின்படி, இவர்கள் பலரிடம் கடன் வாங்கியிருப்பது தெரிகிறது. கடனைத் திருப்பிசெலுத்த சிரமப்பட்ட நிலையில், அவர்கள் அதற்காக அவமானப்படுத்தப்பட்டதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்" என்று கூறினார்.

மேலும், "பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பணம் வாங்கிய 25 பேர் மீது நாங்கள் ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளோம். இவர்களால் குடும்பத்தினர் துன்புறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர், எனவே அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 25 பேரில், இதுவரை 13 பேரை தற்கொலைக்குத் தூண்டுதல், பட்டியல் சாதி மற்றும் அட்டவணைப் பிரிவு, பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கைது செய்துள்ளோம்" என தெரிவித்தார்.

x