நள்ளிரவில் பரிகார பூஜை... கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: சாமியாரிடம் சிபிசிஐடி நடத்திய விசாரணையில் அம்பலம்!


கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சாமியார் ஒருவரை சிபிசிஐடியினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரின் மகள் ஹேமமாலினி திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். ஹேமமாலினிக்கு நாகதோஷம் இருப்பதாகவும், அவருக்குப் பரிகார பூஜை செய்தால் தோஷம் தீரும் எனவும் அக்கம்பக்கத்தினர் ராமகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த 13-ம் தேதி மாணவியின் உறவினர்கள் ஹேமமாலினியை பூண்டி அடுத்துள்ள வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் உள்ள ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அந்த ஆசிரமத்தில் உள்ள முனுசாமி என்ற சாமியார் இரவு முழுவதும் இங்கேயே தங்கி பூஜை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதன்பேரில், உறவினர்களுடன் ஹேமமாலினி அங்குத் தங்கியுள்ளார். காலையில் வீட்டிற்கு அவரை அழைத்துவந்ததும் பூச்சி மருந்து குடித்துள்ளார். உயிருக்குப் போராடிய ஹேமமாலினியை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹேமமாலினியின் பெற்றோர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து சாமியார் முனுசாமி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்தனர். இதையடுத்து காவல் துறையினர் பூசாரி முனுசாமி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிசிஐடியினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், மாணவி ஹேமமாலினியை சாமியார் முனுசாமி பாலியல் வன்கொடுமை செய்ததும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஹேமமாலினி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, சாமியார் முனுசாமியை நேற்று கைது செய்த சிபிசிஐடி அதிகாரிகள், அவர் மீது பாலியல் வன்கொடுமை செய்தது, தற்கொலைக்குத் தூண்டியது என 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

x