3 ஆண்டுகளாக கல்லூரி மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை!- சிக்கிய‌ உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நகர செயலாளர்


கல்லூரி மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நகர செயலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக பல்லாவரம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பல்லாவரம் போலீஸார் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலை ஓரத்தில் உள்ள முட்புதர் மறைவில் ஒருவர் கஞ்சா விற்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து அங்குச் சென்ற காவலர்கள் அவரை கைது செய்தனர். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் தாம்பரம் சானிட்டோரியத்தை சேர்ந்த அர்ஜூன் என்பது தெரியவந்தது. மேலும் இவருக்கு பல்லாவரத்தைச் சேர்ந்த அருண் என்பவர் கஞ்சா சப்ளை செய்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கல்லூரி மாணவர்கள் போல அருணிடம் பேசிய காவல்துறையினர், அவரிடம் கஞ்சா வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அப்போது தன்னிடம் இருந்த கஞ்சா விற்பனையாகி விட்டதாகவும், பல்லாவரம் தினேஷ் என்பவரிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என தினேஷின் செல்போன் எண்ணைக் கொடுத்துள்ளார். காவல்துறையினர் தினேஷை தொடர்பு கொண்டு பேசிய போது பல்லாவரத்தில் இருக்கும் தனியார் கல்லூரிக்கு வருமாறு அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த கல்லூரி அருகே காத்திருந்த காவலர்கள் தினேஷ் வந்ததும் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினேஷிடம் நடைபெற்ற விசாரணையில் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் நற்பணி மன்ற பல்லாவரம் நகரச் செயலாளர் என்பதும், கடந்த மூன்று வருடங்களாக அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. தினேஷ் மற்றும் அர்ஜூன் ஆகியோர் கஞ்சா விற்பனை செய்யப் பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். மேலும் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருக்கும் அருண் என்பவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

x