புதுக்கோட்டை/திண்டுக்கல்: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மணமேல்குடியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. மாற்றுத் திறனாளியான இவர், சோலார்மின் உற்பத்திக்கான கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளார்.இதற்கு மின் மீட்டர் பொருத்துவதற்காக நாகுடி மின்வாரியஅலுவலகத்தில் விண்ணப்பித்தபோது, ரூ.5 லட்சம் லஞ்சம் தருமாறு உதவி செயற் பொறியாளர் பிருந்தாவனன்(45) கேட்டுள்ளார்.
ஆனால், ரூ.1.75 லட்சம்தர ஒப்புக்கொண்ட நாராயணசாமி, முதல்கட்டமாக ரூ.1லட்சம் தருவதாகக் கூறியுள்ளார். பின்னர், லஞ்சம் கொடுக்க விரும்பாத நாராயணசாமி, புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் ஏற்பாட்டின்படி, ரசாயனம் தடவிய ரூ.1 லட்சத்தை நேற்று உதவி செயற் பொறியாளர் பிருந்தாவனனிடம் நாராயணசாமி கொடுத்தபோது, அங்குமறைந்திருந்த டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் பிருந்தாவனனை கைது செய்தனர்.
நில அளவை அதிகாரி கைது: திண்டுக்கல் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தகணேஷ்குமார், வெற்றி விநாயகர் நகரில் உள்ள வீட்டை விற்பனை செய்வதற்காக, அந்த இடத்துக்கு தனிப் பட்டா கோரி விண்ணப்பித்திருந்தார். இதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம்கொடுக்குமாறு நில அளவைஉதவி ஆய்வாளர் பாக்கியராஜ் கேட்டுள்ளார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸில் கணேஷ்குமார் புகார் செய்தார். போலீஸார் ஏற்பாட்டின்படி ரூ.15 ஆயிரத்தை கணேஷ்குமார் நேற்றுபாக்கியராஜிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த போலீஸார் நில அளவை உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் மற்றும் உதவியாக இருந்த இடைத்தரகர் சதீஷ் ஆகியோரைக் கைது செய்தனர்