`போலீஸார் பொய் சொல்கிறார்கள்; மகன் சாவுக்கு நீதி கிடைக்கணும்'- ராஜசேகரின் தாயார் கண்ணீர்


"என் மகனுக்கு எந்த நோயும் இல்லை. வலிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக போலீஸார் பொய் சொல்கிறார்கள். மகன் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம்" ராஜசேகரின் தாயார் கண்ணீர் மல்க கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம், அலமாதி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்(30). இவர் மீது சோழவரம், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ராஜசேகரை கொடுங்கையூர் போலீஸார் 2020-ம் ஆண்டு குற்ற வழக்கு ஒன்றில் விசாரிப்பதற்காக நேற்று காவல் நிலையம் அழைத்து வந்தனர். குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜன், முதல்வர் பாதுகாப்புப் பணிக்குச் சென்று விட்டதால், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் இந்த வழக்கை விசாரித்ததாக கூறப்படுகிறது. போலீஸார் விசாரணையின் போது குற்றவாளி ராஜசேகர் உயிரிழந்த நிலையில், அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ராஜசேகரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் மரணமடைந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்டோர் நேற்றிரவு முழுவதும் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, கொடுங்கையூர் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமை காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ணன் மற்றும் முதல் நிலை காவலர் சத்திய மூர்த்தி ஆகிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனிடையே, கெல்லீஸ் சிறார் 12-வது நீதிமன்ற நடுவர் லட்சுமி எவரெடி காலனி போலீஸ் பூத், கொடுங்கையூர் காவல் நிலையம் ஆகிய இடங்களில் விசாரணை நடத்தி காவல் நிலையத்திய கோப்புகளை ஆய்வு செய்தார். பின்னர் சம்பந்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று மாஜிஸ்திரேட் லட்சுமி விசாரணை நடத்தினார்.

இதனிடையே, உயிரிழந்த ராஜசேகரின் தாய் உஷா கூறுகையில், "தனது மகன் ராஜசேகருக்கு எந்தவிதமான நோயும் இல்லாத நிலையில், அவருக்கு வலிப்பு வந்து இறந்துவிட்டதாக காவல்துறையினர் கூறுவது நம்பத்தகுந்தது அல்ல. தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை ராஜசேகரின் உடலை வாங்க மாட்டோம். சம்மந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

x