நாளை நமக்கு திருமண நாள்... சமாதானம் பேசி அழைத்து வந்த கணவன்: மாமியார் வீட்டில் பெண்ணுக்கு நடந்த கொடுமை


தனஶ்ரீயா, கீர்த்திராஜ்

மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த கணவன், அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுவதாக இறந்த பெண்ணின் பெற்றோர்கள் குற்றச்சாட்டியுள்ளது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர்கள் கீர்த்திராஜ் (31)- தனஸ்ரீயா(26) தம்பதியினர். இவர்களுக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருத்து வேற்றுமையால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனஸ்ரீயா, கணவனிடம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நாளை செவ்வாய் கிழமை தங்களின் திருமண நாள் என்பதால் நேற்று தனஸ்ரீயாவின் வீட்டிற்கு சென்ற கீர்த்திராஜ், அதைச் சொல்லி மனைவியை சமாதானம் செய்து தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனஸ்ரீயா தற்கொலை செய்து கொண்டதாக அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேரில் சென்று பார்த்தபோது, தனஸ்ரீயாவின் தலைப் பகுதி மற்றும் உடல் முழுவதும் ஆங்காங்கே காயங்கள் இருந்துள்ளது. இதுதொடர்பாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

தனஸ்ரீயாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கணவர் கீர்த்திராஜ் மற்றும் அவரது பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான நாளிலிருந்தே கீர்த்திராஜ் குடும்பத்தினர் தங்கள் மகளை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாகவும், தற்போது அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் கூறும் தனஶ்ரீயாவின் பெற்றோர்கள், தங்கள் மகளை திட்டமிட்டு அழைத்துச் சென்று கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே தங்கள் மகள் மரணத்திற்கு முறையான விசாரணை நடத்தி வேண்டும் என்று அவர்கள் புகார் அளித்துள்ளனர். நாளை திருமண நாள் கொண்டாட உள்ள நிலையில் மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

x