சென்னை கார் ஓட்டுநர் ரவி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் செந்தில்குமார் உள்பட இருவர் நெல்லை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.
சென்னை கே.கே நகர் விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (26). இவர் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடையில் பணிபுரிந்து வந்தார். அத்துடன் கார் ஓட்டுநராகவும் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 30-ம் தேதி ரவியை ஐந்து பேர் கொண்ட கும்பல், போலீஸ் எனக்கூறி விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக வறப்படுகிறது.
இதுகுறித்து ரவி மனைவி ஐஸ்வர்யா விசாரித்த போது, கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்து யாரையும் விசாரணைக்கு அழைத்து வரவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா தனது கணவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடந்த 4-ம் தேதி கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், தனது வீட்டின் அருகே செம்பியம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் செந்தில்குமார், கள்ளக்காதலி கவிதாவுடன் வசித்து வந்தார் என்றும், செந்தில்குமாருடன் சேர்ந்து தனது கணவர் ரவி தினமும் மது அருந்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது குழந்தை ஜெசிகா செந்தில்குமாரின் வீட்டருகே சிறுநீர் கழித்ததால், கவிதாவுன் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அப்போது தனது கணவர் ரவியை செந்தில்குமார் கொலைசெய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது கணவர் காணாமல்போன அடுத்தநாளே செந்தில்குமார் குடும்பத்துடன் வீட்டைக்காலி செய்துவிட்டுச் சென்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் காவல் ஆணையரிடம் ஐஸ்வர்யா புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வைத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், காவலர் செந்தில்குமார் வீட்டில் விசேஷம் எனக்கூறி கடந்த 28-ம் தேதி முதல் பணிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த கே.கே நகர் போலீஸார், தனிப்படை அமைத்து காணாமல் போன செந்தில்குமார், அவரது கள்ளக்காதலி கவிதா ஆகியோரின் செல்போன் எண்களை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்களது செல்போன் சிக்னல் செங்கல்பட்டு பழமத்தூர் கிராமத்தின் காட்டுப்பகுதியில் ஸ்விட்ச் ஆப் ஆனது கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் செங்கல்பட்டு அருகே எரிந்த நிலையில் ரவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து செந்தில்குமாரின் கள்ளக்காதலி கவிதாவைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, மே 30-ம் தேதி அதிகாலை செந்தில்குமார் அவரது நண்பர்கள் ஐசக், எட்வின் உட்பட 5 பேர் கொண்ட கும்பலுடன் சென்று ரவியை சரமாரி அடித்து உதைத்து, அவர் மயங்கிய பின்னர் அவரை தூக்கிச் சென்று செங்கல்பட்டு காட்டுப்பகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து போலீஸார், 4 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான செந்தில்குமார், ஐசக், எட்வின் உட்பட 5 பேரை தேடிவந்தனர். இந்நிலையில் காவலர் செந்தில்குமார், ஐசக் ஆகிய இருவரும் நெல்லை நீதிமன்றத்தில் இன்று சரண்டைந்தனர். அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.